Links

Friday, May 20, 2011

பயணம் - பகுதி 1


பகுதி 1  - அன்றொரு நாள்

காலை 7:30 மணி 

ஏனோ தெரியவில்லை அன்று காலை நடந்த சம்பவங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்த மாதிரியே இருந்தது. நான் எப்பொழுதும்  காலையில் தாமதமாகத்தான் எழுந்திருப்பேன், ஆனால் அன்றோ மிகவும் தாமதமாகிவிட்டது, எழுந்து பல் தேய்க்க சென்ற போது தான் பேஸ்ட் தீர்ந்துவிட்டதை அறிந்தேன், பின்பு அருகில் இருக்கும் கடையில் சென்று வாங்கி வருவதற்குள் இன்னும் நேரம் விரயமானது.

இவ்வாறு நடந்த எல்லா நிகழ்வுகளாலும் வழக்கமாக 6:45 கல்லூரிக்கு கிளம்பிவிடும் நான் 7:15 ஆகியும் இன்னும் வீட்டைவிட்டு கிளம்பாமல் இருந்தேன். இறுதியாக வீட்டைவிட்டு வெளியே வரும்போது செல்போன் எடுக்க மறந்து விட்டது ஞாபகம் வந்தது, வீட்டிற்குள் வந்து பார்த்தால் அதில் சுத்தமாக சார்ஜ் இல்லை.  சரி ஆனது ஆகட்டும் இத ஒரு அஞ்சு நிமிஷம் சார்ஜ் பண்ணிட்டு வரலாம் என்று நினைத்துக்கொண்டே அதை சார்ஜில் போட்டு விட்டு செய்தித்தாளை புரட்டினேன். செய்தித்தாளை  பார்த்ததில் நேரம் போனதே தெரியவில்லை, 7:25 க்கு வீட்டில் இருந்து கிளம்பி பஸ் ஸ்டாண்ட் வந்து இதையெல்லாம் நினைத்துக்கொண்டிருந்தேன் .

"பட்ட காலிலே படும்" என்ற பழமொழிக்கு அர்த்தம் அன்றுதான் தெரிந்தது வழக்கமாக வரும் பஸ் கூட அன்று வரவில்லை. நானோ அந்த பஸ்ஐ பிடித்து ரயில்வே ஸ்டேஷன் சென்று ரயில் பிடித்து காலேஜ் செல்ல வேண்டும்.  இன்னைக்கு காலேஜ் போன மாதிரிதான் என்று எண்ணிக்கொண்டு இருந்த போது தான் ஏனோ என்னை அறியாமலே அந்த வழியாக வந்த ஆட்டோவை பார்த்து கை போட்டேன். எவ்வளவு தான் லேட் ஆனாலும் அட்ன்டென்ஸ் கூட போனாலும் பஸ்சில் மட்டுமே செல்லும் நான் அன்று எதோ ஒரு அவசரத்தில் ஆட்டோவை நிறுத்திவிட்டேன். ஆட்டோ என்னை நோக்கி வரும் போது ஆடோவின் டிரைவர் பக்கத்தில் ஒருவர் உட்காந்திருப்பதும் பின்னால் யாரோ ஒருவர் மட்டும் உட்காந்திருப்பது தெரிந்தது. ஆட்டோ என் அருகில் வந்து நின்றவுடன் டிரைவரை நோக்கி குனிந்து "ரயில்வே ஸ்டேஷன்"  என்றேன், அதற்கு அவனோ "வா தம்பி பத்து ரூபா" என்றான். ஆட்டோவில் சென்று உட்கார செல்லும் பொது பின்னால் ஏற்கனேவே இருக்கும் இரு விழிகள் என்னை பார்த்து லேசாக விரிந்தது, என் விழிகளோ அவளை பார்த்து அகல விரிந்தது.


என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை, காரணம் ஆட்டோவில் உட்காந்திருப்பது ஹரிதா என்னுடன் காலேஜில், ஒரே வகுப்பில் படிப்பவள். ஹரிதாவை பற்றி சொல்ல வேண்டுமானால் காலேஜ் சேர்த்த நாள்லில் இருந்தே அவள் என்னை மிகவும் கவர்ந்திருந்தாள். வகுப்பில் யாராவது ஜோக் சொன்னால் எல்லாரும் சிரிக்கும் போது நானும் சிரித்திக்கொண்டே அவளை பார்பேன், அது மட்டுமல்லாமல் அவள் தினமும் தலையில் அணியும் பூவில் இருந்து, ஏன் சில சமயம் காலில் போட்டிருக்கும் செருப்பு வரை கூட நோட் செய்ததுண்டு. சில நாட்கள் வகுப்பில்  அவளும் என்னை பார்ப்பது போல் ஒரு எண்ணம் தோன்றும், நான் சட்டென்று திரும்பி பார்பதற்குள் அவள் வேறு எங்கோ திரும்பி விடுவாள்.  இந்த பெண்களுக்கு மட்டும் எப்படி இந்த திறமை என்று நான் யோசித்ததுண்டு. என்னை போல் பலருக்கு ஹரிதா மேல் ஒரு கண் இருந்தது.

இதையெல்லாம் நினைத்துக்கொண்டே ஒரு வித உற்சாகத்துடன் ஆட்டோவில் ஏறினேன். ஆனால் ஆட்டோவில் பின் சீட்டில் மூன்று பேர் அமரலாம் ஆனால் நானும் அவளும் மட்டுமே இருந்ததால் நான் ஒரு மூலையிலும் அவள் ஒரு மூலையிலும் உட்காந்திருந்தோம். இன்னும் ஒரு ஆள் ஆட்டோவில் ஏறினால் நாள் நடுவில் முக்கியமாக அவள் அருகில் சென்று விடுவேன்.

ஆனால் அடுத்து ஏறுவது ஒரு பெண்ணாக இருந்தால், அவ்வளவுதான் என் கனவு நாசமாய் போய் விடும். நான் இதே ஓரத்தில் உட்கார புதிதாய் ஏறுபவர் நடுவில் உட்கார வேண்டும். இப்படி நினைத்துக்கொண்டிருக்கும்போதே, என் கனவில் மண்ணை வாரி போடுவது ஒரு பெண் ஆடோவை நிறுத்தினாள். என் விதியை நொந்துகொண்டே ஆட்டோவில் இருந்து இறங்கி வழி விட தயாரானேன். அந்த பெண் அருகில் ஆட்டோ வந்து நின்னதும், "தி நகர்" என்றாள் அதற்கு ஆட்டோ டிரைவர் " ரயில்வே ஸ்டேஷன் வரைக்கும் தான் போறேன் " என்று சொல்லி என் கனவிற்கு மீண்டும் உயிர் கொடுத்தார்.

இவ்வளவு நடக்கும் போது ஒரு தடவை கூட ஹரிதாவை நான் பார்க்கவில்லை. வகுப்பில் ஒரு தூரத்தில் இருந்து தைரியமாக அவளை பார்த்ததுண்டு ஆனால் இவ்வளவு அருகில் இருக்கும் போது ஏனோ நேருக்கு நேர் பார்க்க தைரியமில்லை. அப்போது ஆட்டோவின் முன்னால் இருக்கும் review mirroril அவள் முகம் பளிச்சென்று தெரிந்த்து. "ஆகா இது போதுமே" என்று நினைத்துக்கொண்டு அவளை அந்த கண்ணாடியிலே பார்த்துக்கொண்டே வந்தேன்.

சிறுது நேரம் வெளியில் வேடிக்கை பார்த்துக்கொண்டே அந்த கண்ணாடியை பார்த்த போது அவள் நேருக்கு நேர் அந்த கண்ணாடியை பார்த்தாள். ஒரு நிமிடம் நான் யோசித்தேன், "நாம அந்த கண்ணாடியில பார்த்த அவ முகம் தெரிந்தது அப்படினா அவ பார்த்த நம்ம முகம் தெரியும்"... "ச்சே நம்மல்லாம் ஒரு பொண்ணு பாக்குமா, தலை வாரும் போது கண்ணாடியில முகத்த பார்க்கல!!!!"  என்று நினைத்துக்கொண்டே இருக்கும் போதே ஆட்டோ இன்னொருவரை ஏற்ற தயாரானது.

என்றைக்குமே எனக்கு கிடைக்காத அதிர்ஷ்டம் இன்று கிடைத்தது. ஆம் அந்த ஆட்டோவில் அடுத்து ஏறியது ஒரு ஐம்பது வயது தாத்தா, என் கனவை நினைவாக்கினார்

நான் பள்ளியில் படித்ததில் இருந்தே பெண்களிடம் அவ்வளவாக பேசியது கிடையாது , ஏன் ஹலோ சொல்லி கை கூட கொடுத்தது கிடையாது, இப்படி இருக்க முதல் முறையாக ஒரு பெண்ணிடம் அதுவும் எனக்கு பிடித்தவள் அருகில் அமரும் பொது எனக்கு லேசாக வியர்த்தே விட்டது :) .


அவள் அருகில் அமரும் போது அவள் கை என் மீது லேசாக பட்டது , ஏனோ அவள் தேகம் சற்று சூடாக இருபது போல் இருந்தது. "இவளுக்கு என்ன ஜொரமா இல்ல இந்த பொண்ணுங்க உடம்பே சூடா இருக்குமா ? முன்ன பின்ன தொட்டிருந்தா தெரியும் !!!" என்ற குழப்பத்துடன் உட்கார்ந்தேன். ஆடோவின் அந்த மூலையில் இருந்த போதே அவள் முகத்தை நேராக பார்க்க தைரியம் இல்லாத நான், அவள் அருகில் அமர்ந்த போது அவள் பக்கம் கூட என்னால் பார்க்க முடியவில்லை.

சற்று தலை குனிந்தவாறு அவள் சுடிதாரை பார்த்தேன் ,,, அழகான வண்ணத்துபூச்சிகள், தசாவதாரம் படத்தில் கமல் சொன்ன butterfly effect  இப்போது தான் எனக்கு புரிந்தது. காலையிலிருந்து  நான் தாமதமாக கிளம்ப நடந்த எல்லா சம்பவங்களும் இவளை பார்பதற்கு தானோ ? என்று எண்ணினேன்.

"என் வாழ்வில் வந்த Butterfly Effect இந்த butterfly `i பார்க்க தானோ ? " 
என்னை அறியாமல் கவிதை சொல்ல ஆரம்பித்து விட்டேன்.

நான் வசிக்கும் பகுதியின் சாலைகள் பற்றி சொல்லியே தீர வேண்டும் , எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே அங்கு சாலை என ஒன்று இருந்ததே இல்லை. எத்தனையோ நாட்கள் இந்த சாலையையும் அரசாங்கத்தையும் திட்டி தீர்த்திருக்கிறேன். ஆனால் இன்று ஆட்டோ ஒவ்வொரு பள்ளத்தில் இறங்கும்போது அவள் என் மீது லேசாக சாய, அவள் தலைமுடி என் மீது பட, அடடா இந்த ரோடை போடாமல் இருந்த அரசாங்கத்தை கோயில் கட்டி கும்பிட வேண்டும் என தோன்றியது.


இப்படி கரடு முரடான பாதையில் போய் கொண்டிருக்கும்போது அவள் செல்போன் சிணுங்க, அவள் அதை எடுத்து " ஹலோ நான் வந்துகிட்டே இருக்கேன் " என்றாள், எனக்கு மனதில் ஒரு சிறு சந்தேகம் ஒரு வேளை இவளுக்கு boy friend  யாராவது இருப்பானோ ? . என்ற நினைத்து கொண்டு செல்போனில் பேசும் அவளை பார்த்தேன். கண்டிப்பாக இல்லை , ஏனென்றால் Boy Friend உடன் பேசும் பெண்களை நான் பார்த்ததுண்டு, எப்போதும் இல்லாத ஒரு மலர்ச்சி அந்த பெண்களிடம் இருக்கும்.  இவளோ சர்வ சாதரணமாக பேசும் போதே அது கண்டிப்பாக Boy friend இல்லை என நினைத்துக்கொண்டே கடவுளக்கு நன்றி சொன்னேன்.

ரயில்வே ஸ்டேஷன் வந்து விட்டது. ஆம் வாழ்வில் நான் ஆனந்தமாய் இருந்த சில நிமிடங்கள் முடிந்து விட்டது. ஆடோவிலிருந்து இறங்கி என் கையில் இருந்த இருபது ரூபாய்  நோட்டை கொடுத்தேன். அதற்கு அந்த ஆட்டோ டிரைவர் அவள் நீட்டிய பத்து ரூபாய் நோட்டை என்னிடம் கொடுத்தார்.

அந்த நோட்டை வாங்கிய போது என் மனதில் ஒரு குரல் ஒலித்தது

"மாறியது பணம் மட்டுமல்ல என் மனமும் தான்"

இவ்வளவு நேரம் நல்லா தான இருந்தோம் இப்போ ஏதேதோ சொல்லுரேனே , என நினைத்துக்கொண்டு நான் நடந்த போது , பின்னால் இருந்து ஒரு குரல் "சதீஷ் ... ஏய் சதீஷ்"  ஹரிதாவின் குரல், என்னை தான கூப்பிடுகிறாள். நான் திரும்பிய போது அவள் கையில் வைத்திருக்கும் புத்தகங்கள் கீழே விழ அவளை நோக்கி  நான்  நடக்க ஆரம்பித்தேன், என் நடை ஓட்டமாக மாறியது.                                                                                                                             
என் ஓட்டம் அவள் அருகில் நின்ற போது கீழே கிடந்த புத்தகத்தை எடுத்துக்கொண்டிருந்தாள் , நானும் குனிந்து புத்தகத்தை எடுக்கலாம் என்று நினைபதற்குள் எல்லா புத்தகத்தையும் எடுத்துவிட்டாள்.

லேசாக கூந்தலை கை விரலால் கோதியபடி என்னை பார்த்து " சதீஷ் ஒரு சின்ன ஹெல்ப் பண்ணு முடியுமா ?" . அவள் சொல்லிய எந்த வார்த்தையும் என் காதில் விழவில்லை அவள் தலை முடியை தன கை விரலால் கோதிய காட்சியை என் மனது ரசித்துகொண்டிருந்தது.
"சதீஷ் நான் உன்கிட்ட தான் பேசுறேன்" என்று சொன்னாள்.

"ஹ்ம்ம் சொல்லுங்க " என்றேன்.

"வழக்கமா அம்மா கிட்டே தான் பாக்கெட் மணி வாங்குவேன். இன்னைக்கி வாங்கி பர்ஸ்ல வச்சேன். ஆனா பார்ச வீட்டுல மறந்து வச்சுட்டேன். பைல வச்சுருந்த காச ஆட்டோக்கு கொடுத்திட்டேன். என்னோட ட்ரைன் பாஸ் வேற போன வாரமே முடிஞ்சுருச்சு. Please எனக்கு  என்னக்கி மட்டும் ட்ரைன் டிக்கெட் எடுத்து தர முடியுமா. நான் நாளைக்கு கண்டிப்பா திருப்பி தந்திறேன்"


"No Problem ! வாங்க நானே டிக்கெட் வங்கி தரேன்" என்றேன்.

அதிர்ஷ்ட தேவதை என்பதின் அர்த்தம் இன்று தான் எனக்கு புரிந்தது, எந்த பெண்ணை நான் இவ்வளவு நாள் ரசித்தேனோ அவள் கூட பேசும் ஒரு வாயப்பு இன்று கிடைத்ததை நினைத்துக்கொண்டே என் பர்சை பார்த்தேன். அதில் ஹரிதாவின் பத்து ருபாய் நோட்டு , ஒரு நூறு ருபாய் நோட்டு இருந்தது. ஹரிதாவின் கைபட்ட அந்த நோட்டை எனக்கு தர விருப்பமில்லை அதனால் டிக்கெட் வாங்குவதற்கு நூறு ருபாய் நோட்டை வெளியே எடுத்தேன்.


நூறு ருபாய் நோட்டை பார்த்த ஹரிதா. "சதீஷ் இந்த டிக்கெட் கவுன்ட்டர்ல இருக்கிற ஆளு நூறு ருபாய் நோட்டை பாத்தா கண்ணா பின்னானு கத்துவான். போய் சில்லறை கொண்டுவானு டிக்கெட்டே தர மாட்டான்."


"என்னை பாத்தா சொல்ல மாட்டான் " என்றேன்


"அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல போன வாரம் அவன் கிட்டே செமத்திய நான் வாங்கி கடிகிட்டேன். போன வாரம் அவனால ட்ரைன மிஸ் பண்ணிட்டேன்".

"நீ வேணும்னா பாரு என்னை ஒன்னும் சொல்ல மாட்டான்" இன்று சொல்லிய படி டிக்கெட் கவுன்டரில் நூறு ருபாய்  நீட்டினேன்.

உள்ளே ஒரு ஐம்பது வயசான ஒரு ஆள் தலை முடியெல்லாம் முழுவதும் நரைத்துப்போய், கௌண்டமணி ஸ்டைல்ல சொல்லனும்னா

"உள்ள ஒரு சோன்பப்புடி தலையன் உட்காந்திருந்தான்".

நான் கொடுத்த நூறு ருபாய் நோட்டை பார்த்தான் அப்புறம் என்னை பார்த்தான், எதுவுமே பேசாமல் டிக்கெட் கொடுத்தான் கூடவே மிச்ச சில்லரையும் கொடுத்தான்.


ஹரிதா ஆச்சரியத்துடன் என்னை பார்த்தாள் "எப்படி அந்த ஆள் ஒரு வார்த்தை கூட பேசல " என்றாள்.

"அதெல்லாம் அப்படித்தான்" என்று கூறி டிக்கெட் மற்றும் மிச்ச சில்லறையை அவளிடம் கொடுத்தேன்.

"ஏய் டிக்கெட் மட்டும் போதும், காசு வேணாம்" என்றாள் தயக்கத்துடன்.

"கைல சுத்தமா காசு இல்லன்னு சொன்ன, மத்தியானம் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவே திருப்பி சாயங்காலம் வீட்டுக்கு வரும் போது, அது மட்டுமில்ல இந்த மாதிரி சில்லறை என் கைல இருந்த சீக்கிரம் காலி ஆயிடும். நாளைக்கி நீ திருப்பி தரும் போது நூறு ரூபாயா கொடு"

சரி என்று தலை ஆட்டியபடி டிக்கெட் மட்டும் சில்லறையை என் கையில் இருந்து வாங்கினாள். இருவரும் ரயில்வே ஸ்டேஷன் நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.

"கேட்கவே மறந்துட்டேன், அந்த ஆள் எப்படி உன்ன திட்டமா டிக்கெட் கொடுத்தான். நான் அவன்  பல பேர திட்டி பார்த்திருக்கேன் உன்ன மட்டும் ஏன் திட்டல?"


"என்ன திட்டாதது தான்  பிரச்சனையா, அது ஒரு சின்ன கதை ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் நடந்துது" என்று கூறும் போது ரயில்வே ஸ்டேஷன் உள்ளே வந்துவிட்டோம்.

"லேடீஸ் கோச் அந்த பக்கம் வரும்னு நெனைக்கிறேன்" என்றேன்.

"ஏற்கனேவே லேட் ஆயிடுச்சி லேடீஸ் கோச்ல நம்ம கிளாஸ் கேர்ள்ஸ் யாருமே இருக்க மாட்டாங்க, போர் அடிக்கும்!! நான் உன் கூடவே வரேன். நீ மொதல்ல உன்ன ஏன் அந்த ஆள் திட்டலேன்னு சொல்லு"


நான் லேசாக சிரித்தேன் சற்று எட்டி சிக்னலை பார்த்தேன் அது சிகப்பில் இருந்து பச்சைக்கு மாறியது.
இரண்டு நாட்களுக்கு முன்னால் நடந்த அந்த சம்பவம் அவளுக்கு இப்படி ஒரு ஆர்வத்தை தூண்டும் என்று நான் எதிர்பார்கவில்லை ,


"சரி சொல்றேன், போன வாரம் அதே டிக்கெட் கவுன்ட்டர்ல 100 ருபாய் கொடுத்து டிக்கெட் கேட்டா போய் சில்லறை கொண்டுவானு தொறதிட்டான், அவனால ட்ரைன மிஸ் பண்ணி,...  நீ கூட பார்த்திருப்ப போன வாரம் maths கிளாஸ்ல லேட்டா வந்து... செம்ம திட்டு வாங்கினேனே, அப்போ முடிவு பண்ணினேன் இவன ஒரு வழி பண்ணனும்னு , அடுத்த நாள் வீட்டுக்கு பக்கத்துல இருக்கிற மளிகை கடைக்கு போய் ஒரு 40 ரூபாய்க்கு 50 பைசா காயின் வாங்கி வச்சிகிட்டேன்"


இப்படி சொல்லி கொண்டிருக்கும்போது ட்ரைன் வந்துவிட்டது , நாங்கள் இருவரும் ஒரே கோச்சில் ஏறினோம். உள்ளே செல்லும்போது நான் கடவுளிடம் இன்னொரு வரம் வேண்டினேன் " தெய்வமே இந்த கோச்ல நம்ம காலேஜ்ல முக்கியமா நம்ம பசங்க யாருமே இருக்க கூடாது", நான் அவளுடன் வருவதை பார்த்தா என் கதை கந்தல். கடவுளக்கு அன்னைக்கு நல்ல மூட் என் வரம் உண்மையானது.

உள்ளே எங்கள் இருவருக்காக இரண்டு இருக்கைகள் காலியாக இருக்க மறுபடியும் அவள் அருகில் என் பயணத்தை தொடர்ந்தேன்.


அன்று லேசாக மழை தூற ஆரம்பித்தது , அவள் ஜன்னல் வழியாக லேசாக எட்டி பார்த்தாள் , வாடை காற்று அவள் கூந்தலை சிறகடிக்க , மழை தூறல் அவள் நெற்றியில் நடணம் ஆட , மீண்டும் என் மணதில் ஓர் குரல்


"எனக்கு மட்டும் சக்தி இருந்தால் காற்றாக மாறி உன் கூந்தலில் ஒரு கூகள் search செய்திருப்பேன்"
என்ன சர்ச் என்கிறாயா 
என் மணதின் குரல் அடங்குவதற்குள் என் மணதை கொய்தவளின் குரல்
"சரி.... அப்புறம்  என்ன ஆச்சு மளிகை கடைக்கு போய் சில்லறை வாங்கினே ...."

"ஓ அதுவா , அடுத்த நாள் அதே கவுன்ட்டர்ல நூறு ருபாய் நீட்டினேன் போய் சில்லறை கொண்டுவான்னு சொன்னான், உடனே 20 ரூபாய்க்கு 50 பைசா 25 பைசா காச ஒரு துணி பொட்டலமா கொடுத்தேன், என்னது இதுனு கேட்டான் , நீங்க தானே சில்லறை கேட்டீங்க அப்படின்னு சொன்னேன் , 20 ரூபாய்க்கு சில்லறை யோசிச்சு பாரு கிட்ட தட்ட ஒரு நாற்பது ஐம்பது காயின் இருக்கும்... அதே எண்ணி முடிக்கேவே அஞ்சு நிமிஷம் ஆயிடுச்சு... கவுன்ட்டர்ல கூட்டம் சேர, எல்லாரும் அவன திட்ட ஆரம்பிச்சிட்டாங்க , அதனால என்ன கண்டா அவனுக்கு ஒரு பயம், ஏதோ ஒரு நாள் சில்லறை இல்லேன்னு சொன்னா சரி , தினமும் இத ஒரு பொழப்பா வச்சிருந்தா கோபம் வராது "


நான் இதை சொல்லி முடிக்க அவள் விழுந்து விழுந்து சிரித்தாள், என் வாழ்வில் இது வரை வராத குழப்பம் அப்போது வந்தது , அவள் சிரிக்கும் போது நெற்றியில் வந்து விழும் கூந்தலை பார்பதா, அவள் தலை அசையும் போது லேசாக அசையும் கம்மலை பார்பதா, 


"உன்னை நான் வேற மாதிரி நினைச்சேன் ... பெரிய ஆளு டா நீ ", என்றாள் லேசாக கூந்தலை கோதியபடி
"வேற மாதிரினா?" 
"உன்ன டக்குனு யாராவது பார்த்தாங்கனா , பரட்டை தலை , கண்ணாடி , புல் ஹான்ட் சட்டை, எப்போவுமே அமைதியா "
"என்ன லூசுன்னு நெனச்சியா "
"இல்ல லூசு வேற மாதிரி இருக்கும், உன்னை ஒரு பழம்னு நினைச்சேன் !!!"

எனக்கு தூக்கி வாரி போட்டது இப்படி ஒரு இமேஜ்யா நா maintain பண்ணிக்கிட்டு இருக்கேன். அமைதியா இருந்த பழம், ஓவரா பேசுனா செம்ம சீனு  ...  இந்த பொண்ணுங்க எப்படி நம்மல define பண்ணுராங்கேனே புரியலேயே 


அவளுக்கு ஒரு கவுன்ட்டர் கொடுக்க வேண்டும் என நினைத்த படியே 
"நா கூட தான் உன்னை என்னமோன்னு நினைச்சேன் .. நீ வேறே மாதிரி இருக்கே " என்று ஒரு அவசரத்தில் சொல்லிவிட்டேன்.
"அப்படி என்ன நீ நினைச்சே " என்றாள் ஒரு சின்ன எதிர்பார்போடு 

அடடா உளறிட்டேனே இப்போ என்ன பண்ணுறது?,என நினைத்துக்கொண்டிருக்கும்போது ரயில் ஒரு ஸ்டேஷன்இல் நின்றது. சரி பேச்ச மாத்த வேண்டியது தான் என் முடிவு செய்து 
"இது என்ன ஸ்டேஷன் " என்றேன்
"ஹ்ம்ம் ரேடியோ ஸ்டேஷன் , கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு என்ன பத்தி என்ன நினைச்சே?"

"எப்படி திரும்பினாலும் கேட் போடுறாளே," என மனதில் நினைத்த படி,  உன்னை தான் எப்போவுமே நினைச்சுகிட்டு இருக்கேன் என்று சொல்லலாம்னு almost முடிவு செய்துவிட்டேன் , அப்போது 
தான் தோணிச்சு வாழ்க்கையிலே இப்போ தான் ஒரு பொண்ணு நம்ம கூட ஒழுங்கா பேசுது, இத கெடுக்கணுமா, "டேய் சதிஷ் உடனே ஒரு கதையே ரெடி பண்ணு டா"

"அதாவது" என ஆரம்பித்தேன் அடுத்து என்ன சொல்றதுனே தெரியாமல் , " நீ தப்பா எடுதுக்கலனா " என்று இழுத்தேன் 
"தப்பாவா நீ மொதல்லா என்ன விஷயம்னு சொல்லு ". 
கிட்டத்தட்ட இப்படி ஒரு பதிலை தான் நான் எதிர்பார்த்தேன், அதனால அவ அந்த பதில சொல்லும்போதே அடுத்து என்ன சொல்றதுன்னு முடிவு செஞ்சேன் 


"ஓகே நா கொஞ்ச opena பேசுவேன் அதனாலே என்கிட்ட பொண்ணுங்க அதிகமா பேச மாட்டாங்க. அதனால தான் நீ தப்பா எடுத்துக்க கூடாதுன்னு சொன்னேன் , சொன்னாலும் சொல்லலேனாலும் you are one of the good looking girls in our class, நான் இதுவரை உன்னை மாதிரி அழகான பொண்ணுங்க சில பேர பார்த்திருக்கேன் , அவுங்க எல்லாருக்கும் அழகு அவங்க மண்டையில ஏறி இருந்துச்சி, என்ன மாதிரி பசங்கள பிச்சக்காரன் மாதிரி பார்ப்பாங்க , அதனாலேயே அந்த மாதிரி பொண்ணுங்கள கண்டாலே நான் கொஞ்சம் தள்ளி நிப்பேன் . ஆனா நீ கொஞ்சம் different , அந்த மாதிரி பொண்ணுங்க கிட்ட இருக்கிற அந்த artificial tendency உன் கிட்ட இல்ல , எல்லார்கிட்டயும் ஒரே மாதிரி பேசுற , சொல்லபோனா எப்போ என் கூட ட்ரைன்ல எந்த விதமான தயக்கமும் இல்லாம பேசுற , சிரிக்கிற , அதனால தான் சொன்னேன் உன்ன பத்தி நான் வேற மாதிரி ..." 

நான் சொல்லி முடித்தவுடன் அவள் சில வினாடிகள் எதுவும் சொல்லவில்லை, அந்த மௌனம் என்னக்குள் ஒரு சூறாவளியை உண்டாக்கியது 

"எவன் ஒருவனாலும் கேட்க முடியாத சத்தம் 
 ஒரு பெண்ணின் மௌனம் "

சில வினாடிகள் தொடர்ந்த அந்த மௌனம் என் மனதை  இன்னும் பதம் பார்த்தது, சிறிது நேரம் கழித்து அவள் " ஹ்ம்ம் " என்றாள், நான் ஆவலோடு அவளை நோக்கினேன்
"நீ சொல்றது கூட கரெக்ட் தான், நான் கூட சில பொண்ணுங்கள பார்த்திருக்கேன் , ஏன் நம்ம பக்கத்துக்கு கிளாஸ்ல சில பேர் இருக்காங்க , அவுங்க பண்ற அட்டுழ்யம் தாங்கல , பசங்கள விடு சில பொண்ணுங்களையே மதிக்கமாட்டங்க, ஆனா நீ நினைக்கிற மாதிரி எல்லாரும் அப்படி இல்ல, இப்போ நான் ஒரு விஷயம் சொல்லுவேன் நீ தப்பா எடுத்துக்க கூடாது , சொல்லவா ?"

"என்னடா ஏன் டயலாக் என்னக்கே திரும்பி வருது" , என நினைத்த படியே " பரவாயில்லை சொல்லு" என்றேன் 

"நீ சில விஷயத்துல ரொம்ப தயங்குற , அந்த பழக்கத்தை விட்டுரு, அன்னைக்கி Physics கிளாஸ்ல சார் நிறைய கஷ்டமான கேள்விஎல்லாம் கேட்டாரு , நம்ம கிளாஸ்ல இருக்குற எல்லாரும் ஏதேதோ தப்பு தப்பா பதில் சொன்னாங்க, நீ மட்டும் கரெக்ட் answera  உன் பக்கத்துல இருகிறவன் கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தே , ஏன் தைரியமா கிளாஸ்ல சொல்லலே. தப்போ சரியோ எழுந்து சொல்ல வேண்டியது தானே ?"

அவள் சொன்ன விஷயம் சரி தான் எனக்குள் இருக்கும் அந்த inferiority Complex பத்தி தான் , அவள் சொன்ன போது கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் அதில் எனக்கு ஒரு சின்ன சந்தோசம் , கிளாஸ்ஸில் நான் மட்டும் தான் அவளை நோட் செய்கிறேன் என இன்று வரை நான் நினைத்தேன் , ஆனால் அவளும் நான் செய்யும் சில விஷயங்களை பார்த்திருக்கிறாள் என நினைக்கும் போது ஆகாயத்தில் பறப்பது போல் இருந்தது.

"ஹ்ம்ம் புரியுது , என்ன செய்ய பழகிடுச்சு , கடைசி பெஞ்ச்ல உட்கார்ந்து உட்கார்ந்து, பதில் சொன்னா பசங்க வேற ஓட்டுவாங்க"


"அதை பத்தி எல்லாம் நீ ஏன் யோசிக்கிற", என்று அவள் சொல்லி கொண்டிருக்கும் போது ரயில் தண்டவாளம் மாறியது , அந்த நேரத்தில் ஏற்பட்ட அந்த ஒரு குலுக்களில் என் பை கிழே விழுந்தது


நான் உடனே கீழே விழுந்த என் பையை எடுத்து உள்ளே நான் வைத்திருந்த தண்ணிர் பாட்டில் ஒழுகி விட்டதா என பார்க்க பையை திறந்து புத்தகங்களை வெளியே எடுத்தேன், அப்போது எடுக்க கூடாத ஒரு புத்தகத்தையும் எடுத்து வெளியே வைத்துவிட்டேன்.

அது ஒன்னும் கில்மா புத்தகம் அல்ல நான் ரொம்ப வருஷமாக என மனதின் குரல்களை பதிவு செய்த புத்தகம், ஹரிதா பற்றிய சில வரிகளும் அதில் அடக்கம்.

என் போறாத காலம் இருந்த சில புத்தகத்தில் சரியாக அவள் அந்த புத்தகத்தை எடுத்தாள், அவள் அந்த புத்தகத்தை படித்துவிட்டால் என்ற திகிலுடன் நான் பேசுவதற்குள் 
அவள் " இது என்ன நோட்புக் ரொம்ப பழசா இருக்கு ", 
"ப்ளீஸ் அதை மட்டும் படிக்காத " என்றேன் 
"ஏன்!!!! இது என்ன டைரியா பார்த்தா டைரி மாதிரி தெரியலே" 
"டைரி இல்ல ஆனா டைரி மாதிரி அது ஒரு கதை அப்புறம் சொல்றேன் " என்றேன் பதட்டத்தோடு 
"கதையா என்ன கதை லவ் ஸ்டோரியா ... டேய் சொல்லேவே இல்ல " என்றாள் ஒரு சிரிப்போடு 

"ஐயோ லவ் ஸ்டோரி எல்லாம் கிடையாது அது வேற மாதிரி" 
"வேற மாதிரினா? டேய் இது என்ன பாய்ஸ் படத்துல்ல ஒருத்தன் ஒரு மாதிரி கதை எழுதுவானே , அதுவா?" , அவள் கிண்டல் தொடர்ந்தது , அவளுக்கு ஏன் அவஸ்தை பிடித்து விட்டது , பெண்களுக்கு பிடித்த விஷயமே ஆண்களை அவஸ்தை பட வைப்பது தானே 

"ச்சே அந்த மாதிரியெல்லாம் ஒன்னும் இல்ல , சரி சொல்றேன் அது நான் ரொம்ப நாளா எழுதுற கவிதை புக் , சொல்ல போனா ரொம்ப வருஷமா எழுதிக்கிட்டு இருக்கேன், அது கிட்ட தட்ட என் டைரி மாதிரி "

"கவிதைலாம் எழுதிவியா ,,, முகத்துல தாடியெல்லாம் காணோம் , சரி ஓகே நான் படிக்கல , ஹ்ம்ம் ஆனா இந்த நோட்புக் நான் தர மாட்டேன்" , அவள் விளையாட்டை ஆரம்பித்து விட்டாள்,  " சரி கவிதை எழுதுவேன்னு சொன்னே, இப்போ எனக்கு instant கவிதை சொல்லு பார்போம் "

"என்ன காபி மாதிரி கவிதை கேக்குற , எப்படி சொல்றது"
"நீ சொல்லிட்டா இதை இப்போவே திருப்பி தரேன்" 

"டேய் மனசாட்சி!!! தேவை இல்லாத நேரத்துல்ல எல்லாம் TR மாதிரி ஏதேதோ சொல்லுவியே இப்போ எங்கடா போன" என் மனதின் குரலை முதல் முறையாக நானே அழைத்தேன், அவனும் சம்மதித்தான் 

அவசரமாக போட்ட காபி போல், டிசைன் பண்ணாமல் அடித்த coding போல், ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் 
"சென்னை 28யில் சிவா சொல்வது போல் ஒரு மொக்கை கவிதை சொன்னேன்... "


சொல்லி முடித்தவுடன் நான் அவளின் பதிலுக்காக காத்திருக்க ரயிலில் இருந்த சில பயணிகள் என்னை பைத்தியக்காரனை பார்ப்பதை போல் பார்த்தார்கள், சிறிய மௌனத்திற்கு பிறகு 
"ஹ்ம்ம் ஏதோ சுமாரா இருக்கு" என்றாள்
"சுமாரா இருக்கா ..." என்றேன் தயக்கத்துடன் 
"ஹேய் சும்மா தான் சொன்னேன் டக்குனு கவிதை கேட்டவுடனே ஏதாவது சொல்லி எஸ்கேப் ஆவேன்னு நினைச்சேன், ஆனா உடனே சொல்லிட்ட, நிறைய எழுதிவியா " 
அப்போது தான் கமல் ஆளவந்தான் படத்தில் சொன்ன வசனம் நினைவுக்கு வந்தது 
"எழுத தேவையில்லை சொன்னாலே வரும் " என்றேன் 

நான் இந்த வசனத்தை சொல்லி முடிக்கவும் நாங்கள் இறங்க வேண்டிய ஸ்டேஷன் வருவதும் சரியாக இருந்தது 
"இந்தா உன்னோடைய டைரி , ஆனா இதை ஒரு நாள் நீ என்கிட்டே படிச்சு காட்டணும்"
நான் லேசாக சிரித்தேன், அந்த புத்தகத்தை வாங்கி ஸ்டேஷனில் இறங்க தயாரானேன்.

வாழ்கையில் நான் அனுபவித்த சந்தோஷமான நிமிடங்கள் நிறைவுக்கு வந்தது, இருவரும் இரயில் நிலையத்தில் இறங்க அவள் இரயிலை விட்டு இறங்கி சற்று முன்னும் பின்னும் பார்த்தாள்,
"என்ன யாரையாவது தேடறியா ?" என்றேன் 
"இல்ல நம்ம காலேஜ் பொண்ணுங்க யாரும் இருக்காங்களான்னு பார்த்தேன்"
"ஏற்கனவே நம்ம லேட்டு , இனிமே யாரும் வர மாட்டங்க"
"அப்பாடி நல்ல வேளை உன்னோட பார்த்தாங்க அப்புறம் நான் அவ்வளவுதான் , ஓட்டி தள்ளிடுவாங்க"

நான் சற்று பலமாக சிரிக்க ஆரம்பித்தேன் 
"ஏன் இப்படி சிரிக்கிற" என்றாள்
"உனக்கும் எனக்கும் பெரிய வித்தியாசம் இல்ல நீ ட்ரைன்ன விட்டு இறங்கும்போது இத பத்தி யோசிச்ச நா ட்ரைன்ல ஏறும் போது யோசிச்சேன் , கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் மத்தவங்கள பத்தி கவலை படாதேன்னு சொன்னே இப்போ நீயே மத்தவங்கள பத்தி யோசிக்கிற "
"ஆமா நீ சொல்றது கரெக்ட் தான் நான் ஏன் மத்தவங்கள பத்தி யோசிக்கணும்"

எங்கள் இருவரின் நட்பை அங்கீகரித்தது அந்த பதில், ஹரிதா உடன் கல்லூரியை நோக்கி நடக்க ஆரம்பித்தேன் , எத்தனையோ நாள் இவ்வழியே கல்லூரி செல்ல வேண்டுமே என்ற கடுப்புடன் நடந்த நான் அன்று முதல் முறையாக ஆனந்தமாய் நடக்க ஆரம்பித்தேன் , ஆட்டோவில் தொடங்கிய அந்த பயணம் என் வாழ்க்கைப் பயணத்தை மாற்றும் என நான் அப்போது நினைக்கவில்லை.

---- பயணங்கள் முடிவதில்லை 


பின்குறிப்பு : இக்கதையில் வரும் பல சம்பவங்கள் கற்பனையே.. என் வாழ்விலும் என் நண்பர்கள் வாழ்விலும் நடந்த சில உண்மை சம்பவங்களும் இதில் அடக்கம்.  மேலும் இக்கதை முழுவதும் கூகுள் Transliteration மூலம் டைப் செய்யப்பட்டது, அதற்கு மேலாக இது என் முதல் சிறுகதை..... எழுத்துப்பிழை பல இருக்க வாய்ப்புள்ளதால் என்னை ரொம்ப திட்டிவிடாதிர்கள் . அடுத்த பகுதிகளுக்கான இணைப்புகள் 




9 comments:

  1. நல்ல நடை.. ஆங்காங்கே வர ஒருவரி கவிதைகள் மிக அருமை..

    ஆனாலும் ஒரு பின்குறிப்பை போட்டு எழுத்துப்பிழைகளில் இருந்து தப்பிக்க கூடாது.. சரிபார்த்தல் அவசியம். :)

    ReplyDelete
  2. @Thiru

    நன்றி திரு ....
    ஹ்ம்ம் பின்குறிப்பு போட்டதே தப்பிக்கத்தான் ... எழுதுப்பிழையில் இருந்து மட்டுமல்ல :)))
    அடுத்த முறை பிழை இருக்காது :))

    ReplyDelete
  3. அருமையான விவரிப்பு .. ஒரு வரிக் கவிதைகள் நச் ... வாசிக்கும்போதே பல இடங்களில் புன்னகையோடுதான் வாசித்தேன்.. அடுத்த பாகங்களையும் வாசித்துவிட்டுச் சொல்கிறேன் :-)

    ReplyDelete
  4. sema sema..., but ean sirukathailaa senthamil la eluthuraanga? intha story ah local slang la narrate panniruntha innum nalla irunthurukkum.., aana kathai vuyir ottama irunthatha maruka mudiyaathu...,

    ReplyDelete
  5. @TechnoLizard

    Thanks for the comments... actually dialogues ellame local slangula thaan irukkum only the narration will be in .....senthamizhunnu sollamaatten but konjam traditional stylela irukkum.... point taken...may be neenga sonna madhiri kooda try pannalam :)

    ReplyDelete
  6. Soora flow na.. Neraiya idathula nalla rasichi sirichen... Adutha rendum padichittu varen.. :)

    ReplyDelete
  7. machi ... superb attempt da.. naan first linela irundhe Unnaiyum Harithavaiyum mindla set panniten.. Intha characters oda conversation plus screenplay vum manusula movie pola odudhu ra ... dhool ...

    ReplyDelete
  8. நான் லேசாக சிரித்தேன் சற்று எட்டி சிக்னலை பார்த்தேன் அது சிகப்பில் இருந்து பச்சைக்கு மாறியது -- Impressing Ragu

    ReplyDelete

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More