Links

Saturday, February 18, 2012

மூன்றாம் உலகம் - பகுதி 3


ஒரு sms என்னை இப்படி யோசிக்க வைத்ததில்லை. ஆனது ஆகட்டும் அவளையே கேட்டுவிடலாம் என முடிவெடுத்தேன், செல் போனில் அவளை அழைத்தேன், என் அழைப்பை அவள் ஏற்கவில்லை, சில நிமடங்கள் கழித்து மீண்டும் ஒரு sms "on d way 2 aunts home to give back the car, will b bck tomo" இந்த பதில் இரண்டு விஷயங்களை உறுதி செய்தது ஒன்று அவளுக்கு என் மேல் கோபம் இல்லை,அப்படி இருந்திருந்தால் என் அழைப்புக்கு பதில் வந்திருக்காது, இரண்டாவது நேற்று பார்ட்டியில் நான் தப்பாக எதுவும் செய்யவில்லை, அப்படி எதாவது செய்திருந்தாலும் இந்த பதில் வந்திருக்காது.

ஆனால் நேற்று இரவு அவளிடம் நான் என்ன பேசினேன், அவள் தோளில் சாய்ந்துகொண்டே நடப்பது போலவும், ரோஜா பூவை கையில் வைத்துக்கொண்டு நான் பேசியது கனவா, இல்லை நிஜத்தில் நடந்ததா?. ஒன்னு தெளிவான உலகத்துல இருக்கணும் இல்லை சுத்தமா தெளிவில்லாத உலகத்தில் இருக்கணும்.... இப்படி ரெண்டுங்கெட்டான் நிலைமையில என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்தேன். நேற்று இரவு அவளிடமிருந்து வந்த sms பின்னால் இருக்கும் உண்மை என்ன?.

என் மூளையில் இந்த விஷயங்கள் சண்டை போட ஆரம்பிக்க என் ஆழ்மனதோ "ஷிவா நீ அவகிட்ட எல்லாத்தையும் சொல்லிட்ட, இதுல கவலை பட எதுவுமே இல்லை, என்னைக்கோ ஒரு நாள் சொல்ல வேண்டியது அத நேத்து ராத்திரியே சொல்லிட்டே" என ஆணித்தனமாகக் கூறியது

நம் மனதின் வார்த்தைகளை எப்போது காது கொடுத்து கேட்டிருக்கிறோம், இந்த மூளை என்ற ஒன்று இல்லாவிட்டால் இந்நேரம் நான் மட்டுமல்ல இவ்வுலகில் காதலிக்கும் எல்லோரும் அவரவர் மனதை திறந்திருபார்கள். நம் மனதிற்கு ஒரு பெண்ணை விரும்ப மட்டுமே தெரியும் ஆனால் இந்த பாழா போன மூளை மட்டுமே "ஒரு வேளை அவளுக்கு என்னை பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வது என யோசிக்க ஆரம்பிக்கும்". மீண்டும் என் இதயம் என மூளையிடம் தோற்றது

என் அறையை விட்டு வெளியே வந்து வேகமாக நடக்க ஆரம்பித்தேன், கார்த்திக்கின் அறையை நோக்கி, நேற்று பார்ட்டியில் அவனும் இருந்தான் சொல்லப்போனால் என்னை என அறைக்கு கொண்டு வந்து சேர்த்ததும் அவன் தான், கண்டிப்பாக அவனுக்கு எதாவது தெரிந்திருக்க வேண்டும். அறைக்குள்ளே சென்றேன் அவன் இன்னும் உறங்கிக்கொண்டிருந்தான், அவன் எழுந்திருக்கும் வரை காத்திருக்க எனக்கு பொறுமையில்லை, அவன் தூக்கம் கலைந்தது
"என்னடா காலங்கத்தால " என தூக்க கலக்கத்துடன் பேச ஆரம்பித்தான்

"காலங்காதாலையா !!! பன்னண்டு மணியாகுது... சரி ஒரு மேட்டர் கேக்கணும்" என ஆரம்பித்தேன்

"டேய் அப்புறம் கேளுடா, கொஞ்ச நேரம் தூங்க விடு"

"டேய் ரொம்ப முக்கியமான விஷயம் .. நேத்து ராத்திரி நான் எப்படி ரூமுக்கு வந்தேன்"

" ஞாபகம் இல்லையா ... யாரு அந்த பொண்ணு ... அவ பேரு ஞாபகம் வர மாட்டேங்குதே " என கார்த்திக் இழுக்க

"ஹரிதா" என நான் கூறினேன்

"கரெக்ட்... பொறம்போக்கு அதான் ஞாபகம் இருக்குல அப்புறம் எதுக்கு கேக்குற ... அவ தான் உன்னை காருல ட்ராப் பண்ணினா... நானும் இன்னொருத்தன்..அவன் பேர் என்ன ... இழவு அவன் பேரும் மறந்திருச்சு... நாங்க ரெண்டு பேரும் தான் உன்னை ரூம்ல கொண்டு சேர்த்தோம் போதுமா .. இப்போ தூங்க விடுடா ... தண்ணி அடிச்சா எல்லார் பேரும் மறந்து மறந்து போகுது டா" மீண்டும் தூங்க சென்றான். நான் விடவில்லை

"உனக்காவது பேரு தான் மறந்து போகுது எனக்கு நீ ஒரு large கொடுத்தியே ஞாபகம் இருக்கா? அதுக்கப்புறம் எதுவுமே ஞாபகம் இல்லடா!!! என்ன நடந்தது உனக்காவது தெரியுமா?"

"ஹ்ம்ம் ஞாபகம் இருக்கு... அந்த சரக்கு எப்படி? சூப்பரா... அந்த bartender எங்க ஊரு ஆளுடா, ஸ்பெஷல் மிக்சிங்..."

என் பொறுமையை சோதிக்க ஆரம்பித்தான் "ரொம்ப முக்கியம் !!! நான் அந்த சரக்கு யாரு மிக்ஸ் பண்ணினங்கனா கேட்டேன் .. அதுக்கப்புறம் என்னடா நடந்துச்சு?"

"ஒரு large அடிச்சதுக்கே இப்படி பேசுற, நேத்து ஒரு எட்டு....... இல்ல பத்து பெக் அடிச்சவன் நான் எனக்கு என்னடா தெரியும்என கூறினான்

"டேய் பக்கி யோசிடா நீ தான் எப்போவுமே ஸ்டெடியா இருப்பியே"

"ஹ்ம்ம் சரியா ஞாபகம் வர மாட்டேங்குதே... கரெக்ட் இப்போ வருது ... பார்ட்டில ஒரு ஓரமா ரெண்டு மூணு பசங்க சேர்ந்து joint அடிச்சுட்டு இருந்தாங்க, நடுவுல நீ புகுந்து ஒரு ரெண்டு மூணு drag இழுத்த"

"நானா !!!! டேய் நான் அதெல்லாம் பண்ண மாட்டேன் டா" என நான் கூற

" அது நீ இல்லையா ? அப்போ அது யாரு" என தூக்ககலகத்தில் கார்த்திக் கேட்க இனி இவனிடம் பேசி பயனில்லை என்ற முடிவிற்கு வந்தேன்.

நான் இன்னும் குழப்பம் அடைந்தது தான் மிச்சம், போதாத குறைக்கு joint, Drag என என்னை 
பயமுறுத்த, ஒரு வேளை நான் நிஜமாக அவ்வாறு செய்திருந்தால், இருக்கிற பிரச்சனை போதும் இனி தாங்காது என்ற நிலைமையில் அவன் அறையை விட்டு வெளியே வர கார்த்திக் , "டேய் ... நேத்தே கேக்கனும்னு நினைச்சேன்... அந்த ரோஜா பூவை எதுக்கு கையில வச்சிருந்த, காலேஜ் கேட்டுல அவ உன்னை ட்ராப் பண்ண போது காருக்குள்ள இருந்து ரோஜா பூவும் கையுமா ரோமியோ மாதிரி இறங்கின.. கேட்டுக்கு வெளியே நின்ன எல்லாரும் சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க, நான் தான் உன் கையில இருந்த பூவை வாங்கி உன் பேண்ட் பாக்கெட்ல வச்சேன்.. பாரு இன்னும் இருக்கும்" என கூறியபடி மீண்டும் தூங்க ஆரம்பித்தான்

இவ்வவவு நேரம் அவன் உளறியத்தில் உருப்படியான விஷயம் இது ஒன்று தான், அப்படியென்றால் நான் கண்டது கனவில்லை, இந்த கிரகங்கள் எல்லாம் எப்போதாவது நேர்கோட்டில் வரும் அதிசயம் போல் என் மனமும் மூளையும் முதல் முறையாக ஒரே உண்மையை நம்ப ஆரம்பித்தது. ஆம் நேற்று இரவு அவளுடன் காரில் பேசியிருக்கிறேன், ஆனால் என்ன கூறினேன்  ?

ரோஜா பூவை கையில் வைத்துக்கொண்டு நான் என்ன இந்திய பொருளாதாரம் பற்றியா பேசியிருப்பேன் என் இதயத்தில் பதிந்த உண்மைகளை பற்றி தான் பேசியிருப்பேன். இந்த விஷயத்தில் இனிமேலும் நான் யோசிக்க விரும்பவில்லை அவளிடமே கேட்டுவிடுவதென்று முடிவெடுத்தேன், அடுத்த நாள் அவள் வருகைக்காக காத்திருக்க ஆரம்பித்தேன்.


------------------------------------------------------------------------------------------------------------
அடுத்த நாள்

இன்று என்ன நடக்கும் என நினைத்தபடியே என் இரவு தூக்கமில்லாமல் கழிந்தது, விடியற்காலை என்னையும் அறியாமல் தூக்கம் என்னை ஆட்கொள்ள மதியம் 11 போல் கண் விழித்தேன். தூக்கத்தில் இருந்து என்னை எழுப்பியது கார்த்திக், நேற்று அவன் தூக்கத்தை கெடுத்தற்காக பழி வாங்குகிறான் என நினைக்கிறன்.

"டேய் காலையில கிளாஸுக்கு போகலையா?" இந்த சத்தம் கேட்டு சட்டென்று எழுந்தேன்

"அடிங் *** தூங்கிடனா... டைம் என்ன ஆகுது"

"பதினோரு மணி ஆகுது... சீக்கிரம் கெளம்பு atleast பன்னிரண்டு மணி கிளாஸுக்கு போ.. ராத்திரி எத்தனை மணிக்கு தூங்கின ?"

"ராத்திரி எங்க தூங்கினேன்... காலையில ஒரு ஆறு மணிக்குதான் தூங்கவே ஆரம்பிச்சேன்... அன்னைக்கி ஓவரா அடிச்சா சரக்கு இப்பவும் வயித்த ஏதோ பண்ணுது டா போதாத குறைக்கு தண்ணி வேற ஜாஸ்தி ஆயிடுச்சா என்ன நடந்துச்சுனே தெரியல" என கூறியபடி எழுந்து வாஷ பேசின் அருகே சென்றேன்.

"நான் அதே கேக்கத்தான் இங்க வந்தேன்!!! உனக்கும் ஹரிதாவுக்கும் என்ன பிரச்சனை, நேத்து நீ என்னடான நல்லா தூங்கிகிட்டு இருந்த என்ன எழுப்பி பார்ட்டில என்ன நடந்துதுன்னு கேட்ட!!! காலையில கிளாஸுல தூங்கிட்டு இருந்த என்னை எழுப்பி "பார்ட்டி முடிஞ்சி நீ ரூமுக்கு எப்படி போன?, என்ன ஆச்சு?" அப்படின்னு அவ கேக்குறா?.. என்ன பார்த்தா காமெடி பீஸ் மாதிரி தெரியுதா?"

என் தூக்க கலகத்தை ஒரே நிமிடத்தில் கலைத்தது இந்த கேள்வி, நான் அவனிடம் "என்னடா சொல்ற? என்னை பத்தி கேட்டாளா ? நீ என்ன சொன்ன ?"

"இதுல சொல்றதுக்கு பெருசா என்ன இருக்கு, உன்னை ரூம்ல கொண்டு வந்து சேர்த்த கதைய சொன்னேன், அது போக அவனுக்கே பார்ட்டில நடந்த விஷயம் எதுவுமே ஞாபகம் இல்ல, நேத்து இதே போல ரூம்ல தூங்கிட்டு இருந்த என்ன எழுப்பி பார்ட்டில என்ன நடந்ததுன்னு நீ கேட்டே கதையையும் சொன்னேன்"

"டேய் ஓட்ட வாய்... எல்லாத்தையும் சொல்லிட்டியா?... அதெல்லாம் ஏன்டா சொன்ன... கவுத்துட்டியே" தலையில் கையை வைத்தபடி நான் உட்கார, கார்த்திக் தொடர்ந்தான்

"இப்போ நான் என்ன தப்பா சொல்லிட்டேன்... நீ அன்னைக்கி போதையில தள்ளாடுனது எல்லாருக்கும் தெரியும்... நான் உண்மையை தான சொன்னேன்"

"உனக்கு சொன்னா புரியாது .. நீ கிளம்பு நான் அப்புறம் பேசுறேன்" என்றேன் குழப்பத்தில்

"என்னமோ பண்ற எனக்கு எதுவும் புரியல ... சரி இன்னைக்கி மூணு மணிக்கி எனக்கு internship interview, உன் ஹெல்மெட் வேணும்"

"அதோ இருக்கு எடுத்துக்கோ" என்றேன் கப்போர்டை நோக்கி
ஹெல்மட்டை எடுத்தபடி "சரி டா பார்போம்" என கூறி விடை பெற்றான்

குட்டைய கலக்குவது என்பதை கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் முதல் முறையாக இப்போது தான் கார்த்திக் மூலமாக கண்கூடாக பார்க்கிறேன். பார்ட்டியில் நடந்த விஷயங்கள் எதுவுமே எனக்கு ஞாபகமில்லை என்பது இது நாள் வரை அவளுக்கு தெரியாது. இன்று கார்த்திக் அதை பற்றி அவளிடம் சொல்லவில்லையென்றால் அப்படி இப்படின்னு எதாவது பேசி ஹரிதாவிடம் விஷயத்தை கறந்திருக்கலாம். இப்போது எனக்கு எதுவுமே ஞாபகம் இல்லை என்பது அவளுக்கும் தெரியும், ஹரிதாவை எப்படி சமாளிக்கபோகிறேன் என யோசிக்க ஆரம்பித்தேன்

                                            -- மூன்றாம் உலகம் தொடரும்


மூன்றாம் உலகம் பகுதி 1
மூன்றாம் உலகம் பகுதி 2
மூன்றாம் உலகம் இறுதிப் பகுதி


0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More